Thursday 11 April 2013

டெரேரியம் & புதிய செல்லம்!

மாமியை இழந்த சமயம் க்றிஸ் வேலையிடத்திலிருந்து ஒரு தோழி (அவரும் க்றிஸ்தான்) மலர்ச்செண்டு ஒன்றை அனுப்பியிருந்தார். கூட வந்தது ஒரு கண்ணாடியிலானான கோளவடிவக்கிண்ணம். பிறிதொருமுறை வீட்டுக்கு வந்தபோது அது வேறு மலர்களுடன் மேசையிலிருக்க, "உங்களுக்கு உபயோகமாக இருக்கும், மாமி நினைவாகவும் இருக்கும் என்றுதான் இதைத் தெரிவுசெய்தேன். பயன்படுத்துகிறீர்கள்." என்று தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்.

அவ்வப்போது பல வடிவங்கள் எடுத்தாலும் ஒரு 'டெரேரியம்'  போல மாற்றவேண்டும் என்னும் ஆசை மனதில் இருந்தது. முறைகளெல்லாம் ஒழுங்காகப் பின்பற்றுவதாக இல்லை. என் போக்கில்தான் எப்பொழுதும் நடுவேன். ஊரில்... என் ஆமைக்குட்டிகளுக்காக மீன் தொட்டியில் அழகாக ஒன்று செய்துவைத்திருந்தேன். அது ஒரு காலம்! ஹ்ம்!!! இனி வராது. ;(

செபா கொடுத்த அழகு கள்ளிச் செடிகளை நடலாம் என்று நினைத்தேன். அலன், மீன் / ஆமைத்தொட்டிகளுக்காகச் சேர்த்து வைத்த பரல்கள் இருந்தன.

முதலில் ஸ்ப்ரைட் போத்தல் அடிப்பாகத்தை வெட்டி சிறு துளைகளிட்டு எடுத்தேன். செடியிலிருந்த மேலதிக வேர்களை வெட்டினேன்.
Potting mix கொண்டு நட்டு வைத்தேன். நீர் ஊற்றினால் மண் கரைந்தோடும் என்று தோன்ற... ஸ்ப்ரே செய்து வடிய வைத்தேன். முதல் முறை என்பதால் மண்ணை முழுவதாக நனையவைத்தேன்.
நீர் தேங்காமல் வடிந்து விட அடியில் பரல்கள் பரவி...
செடியை உள்ளே வைக்க நினைக்க வந்தது சிரமம். ;) செடி மேற்பகுதி அகலமாக இருந்ததால் கண்ணாடிக் கிண்ணத்தைச் சரித்துப் பிடித்து வைக்கவேண்டியதாயிற்று. பரல்கள் ஒருபுறம் ஒதுங்கின. ;( ஒரு விதமாக சரி செய்தேன். அடியில் பரல்களின் உயரம் அதிகரிக்க, செடி உயர்ந்து போயிற்று. ;( என் மனதிலிருந்த அளவீடு பிழைத்துப் போயிற்று. ;(
பரவாயில்லை, விடுமுறையில் வேறுவிதமாக  மீள்நடுகை செய்யலாம். இப்போதைக்கு இருக்கட்டும் என்று மண் மறையும் வரை பரல் சேர்த்தேன். கையால் / கரண்டியால் எடுத்துக் கொட்டினால் இலைகள் நடுவே சேர்ந்துகொள்ளும்; மெல்லிதாகக் கிளம்பும் கண்ணுக்குத் தெரியாத தூசு உள்ளே கண்ணாடி மேற்பரப்பில் படிந்து பளபளப்பைக் குறைத்து விடும். பிறகு சுத்தம் செய்வது சிரமமான காரியம். முன்பு வேறு ஒரு சந்தர்ப்பத்தில் அனுபவித்திருக்கிறேன்.

வெவ்வேறு அளவான போத்தல்களிலிருந்து வெட்டி எடுக்கும் இந்தப் புனல்கள் எங்கள் வீட்டில் பிரபலம். உ+ம் - பொரியல் சட்டி எண்ணெய் வடித்து, பிறகு தூக்கிப் போடுவோம். இது போல் வேலைகளுக்கு நல்ல பொருளைப் பயன்படுத்திக் கெடுப்பானேன்! சட்டென்று புனல் செய்து பரல்களை உள்ளே நிரப்பி பரவிக் கொண்டேன். 

திருப்தியில்லாவிட்டாலும், ரசிக்க முடிகிற அளவு அழகாகத்தான் இருக்கிறது. மூடுவதற்கு cork எடுத்து வைத்திருந்தேன். பாத்திரத்தின் வடிவம் பொருத்தமாக இல்லை. ;( இப்போதைக்கு ஒரு பழைய சீடி, மூடியாக உட்கார்ந்திருக்கிறது. எங்கோ ஒரு பழைய சுவர்க்கடிகாரம் இருக்கவேண்டும். கண்ணில் படும்போது அதன் கண்ணாடியைப் பெயர்த்துப் பயன்படுத்தலாம் என்பதாக எண்ணம் இருக்கிறது. அளவு சரியாக இருக்க வேண்டும்.

நேற்றிரவு எடுத்துப் பார்த்தால்... உள்ளே ஒரு ஜீவராசி ;) பளபளப்பாக ஒரு கருப்புச் சிலந்தி வலைபின்னி வசிக்கிறார். ;)

17 comments:

  1. என்னென்னமோ செய்யறீங்க இமா! இதெல்லாம் எனக்கு பரிச்சயமில்லாத ஏரியா, அதனால் படம் பார்த்துட்டுப் போறேன். :)
    அந்த கள்ளிச் செடி இங்கே பக்கத்தில ஒரு வீட்டில் பார்த்திருக்கேன், வாங்கலாமா என கேட்டதுக்கு அனுமதி கிடைக்கவில்லை. நாங்க பூக்கள் மட்டுமே வளர்ப்போமாம்! ;)

    பரல்கள் - சிறுகற்கள் என்று புரிந்துகொண்டேன், இதுவரை யாமறிந்தது சிலப்பதிகாரத்தில் வரும் மாணிக்கப்பரல்களே! ஹஹ்ஹா! :)

    அப்புறம், இந்த கள்ளிக்கு எப்படித் தண்ணி ஊத்துவீங்க? வடியும் நீரை பரல்களே உறிஞ்சிக்குமா? செடிக்கு வெளிக்காத்து வேணாமா?! என்ர சின்ன மூளைக்கு எட்டியவரை இவ்ளோ கேள்விதான் கிடச்சிது, மெதுவாப் பதில் சொல்லுங்கோ! ;)

    ReplyDelete
    Replies
    1. //மாணிக்கப்பரல்களே! ஹஹ்ஹா! // கையை சுதந்திரதேவி போல பிடிச்சுட்டு சொல்லணும். ;)))

      //அப்புறம், இந்த கள்ளிக்கு எப்படித் தண்ணி ஊத்துவீங்க?// கள்ளி - நீர் அதிகம் தேவையில்லை. திறந்து வைப்பதானால் ஒரு மாதம் கழித்து கொஞ்சம் ஸ்ப்ரே செய்யலாம். மூடி வைத்தால் வேண்டவே வேண்டாம்.
      //செடிக்கு வெளிக்காத்து வேணாமா?!// வேண்டாமே. முழுவதாக சீல் செய்து வைத்தால் கூட அப்படியே வருடக்கணக்காக இருக்கும். பாடசாலையில் 2000 ல் வைத்த 3 சாடிகள் இருக்கின்றன. என்ன, உள்ளே இருப்பது தெளிவாகத் தெரியாது, அவ்வளவுதான்.
      //வடியும் நீரை பரல்களே உறிஞ்சிக்குமா?// இல்லை. அது மண்ணில் நீர் தேங்கி வேர் அழுக்காமல் நீர் வடிவதற்கு மட்டும்.

      உள்ளே தனி உலகம் போல - செடிகள் ஆவியுயிர்ப்பு நடத்தி தாமே மழை பெய்து சீவிக்கும். உ+ம் & பதிலாக, விடுமுறையில் உங்களுக்காக இன்னொரு இடுகை வரும். ;)

      Delete
    2. /முழுவதாக சீல் செய்து வைத்தால் கூட அப்படியே வருடக்கணக்காக இருக்கும்./ அது சரி, ஆனா செடி வளருமா அல்லது இதே உருவ அளவில்தான் வருடக்கணக்கிலும் இருக்குமா?! உங்க விடுமுறை எப்ப வரும் என ஆவாலோடு காத்திருக்கிறேன். :)

      ஆமாம், இந்த வருஷம் தோட்ட வெள்ளாமை:) எதுவுமே காணமே..உங்கூர்ல குளிர்காலம் வரப்போகுதில்ல??!

      Delete
  2. அழகான டேரேரியம். முதன்முறையாக இப்படி ஒரு கலையைப் பற்றி அறிகிறேன். பகிர்வுக்கு நன்றி இமா.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி. 'டெரேரியம்' லிங்க் கொடுத்திருக்கிறேன், பாருங்கள்.

      Delete
    2. பார்த்தேன்பா, இன்னும் இன்செக்டேரியம்,பாலுடேரியம்னு எத்தனை விதம் இருக்கு. எனக்கு அக்வேரியம் மட்டும்தான் தெரியும். இன்று உங்களால் பிறவற்றை அறிந்தேன். நன்றி இமா.

      Delete
    3. இந்த இடுகை உங்களுக்கு உபயோகமாக இருந்ததையிட்டு சந்தோஷம் கீதமஞ்சரி. :-)

      Delete
  3. இதைப்பற்றி இன்று தான் அறிந்து கொண்டேன்...

    அழகு... அருமை... வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. நான் வந்தாலும் வராவிட்டாலும் அது எதையும் பொருட்படுத்தாமல்... 'என் கடன் படித்துக் கருத்துச் சொல்வதே,' என்று தொடர்ந்து வந்து ஊக்கம் தரும் சகோதரர் தனபாலனுக்கு என் அன்பு நன்றிகள்.

      Delete
  4. Very creative. But I can't read Tamil. Thanks for your valuable comment on my post.

    ReplyDelete
    Replies
    1. //But I can't read Tamil.// I am aware of it Ranjana. :) Your sketch looked nice. I only wanted to encourage you. No obligations plz.

      Delete
  5. இமா... டேரேரியம் வளர்க்க நீங்கள் எடுத்திருக்கும் பயனுள்ள எக்கச்சக்கமான குறிப்புகளைப் பார்த்து அசந்துபோனேன்...:O

    எப்படி இமா... உங்களுக்கு மட்டும் இத்தனை நுண்ணியதாய் பலவிடயங்களையும் கற்றுக்கொள்ள முடிகிறது?????

    படித்தாலும் அனுபவப்பட்டாலும்கூட சமயத்தில் ஒன்..றுமே தலைக்குள் (அட மண்டைக்குள் என்ன மண்ணோ எண்டு பேசுவினம் அதுகூட..) இல்லாமல் எனக்கிருக்கு...:(

    அருமையான உதவிக்குறிப்புடன் டேரேரியம் நடுகை, வளர்ப்பு அற்புதம். நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள் இமா!!!

    மகிக்குச் சொன்ன குறிப்பும் என் மனதிற்குள் சேர்த்துக்கொண்டேன். மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. //நீங்கள் எடுத்திருக்கும் பயனுள்ள எக்கச்சக்கமான குறிப்புகளைப் // ;) அது வாசிக்கிற ஆட்களுக்காக தேடிப் போட்டது இளமதி.

      //இத்தனை நுண்ணியதாய் பலவிடயங்களையும் கற்றுக்கொள்ள// அவ்வ்! ;))) பப்பாமரத்தில நிற்கிறன்ன்ன். ;))))))))

      Delete

  6. பரல்கள் - சிறுகற்கள் என்று அரிந்துகொண்டேன்...
    இப்படி ஒருமுறையை செய்து காட்டியதற்கு மிக்க நன்றி அக்கா... நான் இதுபோன்று குடுவையில் இருப்பதை பார்த்திருக்கிறேன் ஆனால் அதன் செய்முறையை தங்கள் மூலம் அறிந்துகொண்டேன். நன்றி...

    ReplyDelete
  7. supera irukku imma appadiye thanthidunga nikilakku.

    ReplyDelete
  8. வாவ்....எவ்வளவு அழகு! டெரேரியம் அறிந்து கொண்டேன், நன்றி இமா!

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா